| ADDED : மே 03, 2024 10:58 PM
குன்றத்துார்:சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியே, தென்மாவட்டங்களில் இருந்து தினமும், ஏராளமான வாகனங்கள், சென்னைக்கு வருகின்றன. இதில் 30 சதவீதம் வாகனங்கள், கோல்கட்டா, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செல்கின்றன. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நெரிசலை குறைக்க, வண்டலுாரில் இருந்து மீஞ்சூர் வரை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியே தினமும், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.வெளிவட்ட சாலையில், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், குன்றத்துார், மலையம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை பல இடங்களில், சாலையோர உணவகங்கள் செயல்படுகின்றன.உணவகத்திற்கு வரும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை சாலையிலே நிறுத்தி செல்கின்றனர். இதனால், 100 கி.மீ., வேகத்தில் வரும் மற்ற வாகனங்கள், நிறுத்தப்படும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. நெடுஞ்சாலையோரம், விதிமுறைகளை மீறி வாகன நிறுத்தம் இடம் அமைக்காமல் உணவகம் நடத்துவோர் மீதும், நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி செல்லும் ஓட்டுனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.