| ADDED : ஜூலை 16, 2024 01:12 AM
உத்திரமேரூர் உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் அரசு மதுக்கடை இயங்கியது. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை அடுத்து அங்கிருந்து டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்பட்டது.இதனிடையே, பெருநகர் ஆற்றங்கரை பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை மானாம்பதியில் இடமாற்றம் செய்ய மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஒ., உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, மானாம்பதி மயானம் செல்லும் சாலை பகுதியில், தனியாரது கட்டடம் ஒன்றில் மது பாட்டில்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவசர நிலையில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.புதிதாக துவக்கிய டாஸ்மாக் கடை அருகாமையில் இருளர் குடியிருப்பு மற்றும் மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத்தளங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, கால்நடை மருந்தகம் என சுற்றிலும் மக்கள் பயன்பாட்டு இடமாக உள்ளதாக அப்பகுதியினர் அங்கு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.பெருநகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, அங்கிருந்து மானாம்பதி பிரதான சாலைக்கு வந்த போராட்டக் குழுவினர், 20 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். எனினும், போராட்டக் குழுவினர் கலைந்து செல்லாததை அடுத்து, 10 பெண்கள் உட்பட 20 நபர்களை போலீசார் கைது செய்து பெருநகர் தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்தனர். பின் விடுவிக்கப்பட்டனர்.இதனிடையே, மானாம்பதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறந்ததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு தலைவி சித்ரா என்பவர் மண்ணெண்ணெய் கேன் எடுத்து கொண்டு சாலைக்கு வந்து தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை அவரிடம் இருந்து விடுவித்தனர்.மானாம்பதியில் புதிதாக துவங்கி உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும் என, அப்பகுதியினர் தெரிவித்து உள்ளனர்.