ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. இதனால், சென்னையில் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாகவிளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் ஸ்ரீபெரும்புதுார் ஏரியும் ஒன்று. இந்த ஏரி, 675 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியும், 235 மில்லியன் கன அடி கொள்ளளவும், 17.60 அடி ஆழமும் கொண்டது. தண்ணீர் மாசு
இந்த ஏரி நீரை பயன்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 1,500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. மேலும், அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் ஏரி விளங்குகிறது.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியின் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது.மழைக்காலத்தில், இந்த கழிவுநீர் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. துர்நாற்றம்
தனியார் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாயில் கலப்பதால், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைகிறது.அதே போல, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைபாக்கம், இருங்காட்டுகோட்டைகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பல ஆயிரக்கணக்கானோர் இங்கு தங்கி உள்ளனர்.விடுதிகளில் இருந்து வெளியேறும், உணவு கழிவு, பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்டவை, செம்பரம்பாக்கம் செல்லும் மழைநீர் கால்வாய் மற்றும் விவசாய பாசன கால்வாயில் வீசுகின்றனர்.இதனால், மாதக்கணக்கில் தேங்கும் கழிவுநீரில், துர்நாற்றம் வீசுவதால், கொசுக்கடி தொல்லையில் அவதி அடைவதோடு, நோய் பரவும் அச்சத்தில் அப்பகுதிவாசிகள் உள்ளனர். பாதாள சாக்கடை திட்டம்
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 2013ல் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், 11 ஆண்டுகளாக நடந்து வருவதால், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, நேரடியாக ஸ்ரீபெரும்புதுார் பாசன மற்றும் உபரிநீர் கால்வாயில் விடுகின்றனர்.பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடித்து செயல்படுத்தப்பட்டால், ஏரி கால்வாயில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் நிறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.எனவே, பருவ மழைக்கு முன், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.