| ADDED : ஜூலை 19, 2024 01:21 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அப்பளம் தயாரிக்கும் குடிசை தொழில் செய்வோரும் உள்ளனர். ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி புதிய ரயில் நிலையம், மீன் சந்தை, ஒலிமுஹமதுபேட்டை, பஞ்சுபேட்டை, அரக்கோணம் ரோடு, கருப்படிதட்டடை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.இத்தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடி வருகிறது.இதனால், நடைபாதை ஒட்டியுள்ள பகுதியில், பாசி படர்ந்துள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஏகாம்பரநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம்சுளித்தபடியே செல்கின்றனர்.எனவே,காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.