காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், நாளை குரோதி, தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்யவும் கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நாளை, காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் தொடர்ந்து விஷுக்கனி தரிசனமும் நடைபெறுகிறுது.இரவு 7:00 மணி தங்க தேரோட்டம் நடக்கிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருகிறார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், குரோதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி, கோவில் வழக்கப்படி இன்று மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. நாளை, காலை 8:00 மணிக்கு புத்தாண்டு விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை, காலை 5:00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு அபிஷேகமும், காலை 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானையருடன் கேடயத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான் கோவில் உட்பிரகாரத்தில் உலா வருகிறார்.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், காலை 6:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.இதேபோல, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலிலும் நாளை, காலை 7:00 மணிக்கு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு மலர் அலங்காரமும் நடைபெறுகிறது.சின்ன காஞ்சிபுரம், கே.எம்.வி., நகர் கற்பக விநாயகருக்கு, நாளை, காலை 7:00 மணிக்கு, தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு அபிஷேகமும், விபூதி காப்பும் நடைபெறுகிறது.