சென்னை'மதுரவாயலில், அபாயகரமான நாய்கள் வளர்க்கும் நபரின் வீட்டை முற்றுகையிட்டு, பகுதிமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில், பூங்காவில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், உரிய ஆவணங்களின்றி அபாயகரமான நாய்களை வளர்ப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், ஆபத்தான நாய்கள் வளர்ப்பவர்களைக் கண்டால், 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும், மாநகராட்சி அறிவித்துள்ளது.சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனி 31வது தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் தன் வீட்டில், 'ஜெர்மன் ஷெப்பர்ட்' உள்ளிட்ட 5 வகை வெளிநாட்டு இன நாய்களை, சட்டவிரோதமாக வளர்த்து வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.நேற்று முன்தினம் இரவு, இதுபோன்ற நாய்களை வளர்க்கும் ஜான்சனின் வீட்டை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, கலைந்து போக செய்தனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:இந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அபாயகரமானவை. அவை இரவு நேரத்தில் அதீத சத்தத்துடன் குரைப்பதால், சிறியவர் முதல் முதியவர் வரை துாங்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.இவர் நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்து, அவற்றை விற்பனை செய்து வருகிறார். நுாற்றுக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில், இதுபோன்ற நாய்களை வளர்க்கக் கூடாது. அந்த நாய்கள் குழந்தைகளை கடிக்கும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.