| ADDED : மே 09, 2024 12:06 AM
சென்னை:வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.மேற்கு மாம்பலம், மகாதேவன் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி, 76. இவரது கணவர் மற்றும் மகள் இறந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் இருவர், சாப்பிட உணவு கேட்டுள்ளனர். அதற்கு பத்மாவதி, தான் வீட்டில் தனியாக உள்ளதாகவும், உணவு எதுவும் இல்லையென்றும் கூறியுள்ளார்.மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், திடீரென பத்மாவதியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் காதில் அணிந்திருந்த 6 கிராம் தங்க கம்மலை பறித்துள்ளனர்.பின், மூதாட்டியை வீட்டின் உள்ளே தள்ளி விட்டு, கதவை வெளிப்புறமாக தாழிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து பத்மாவதி, மொபைல்போன் வாயிலாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் போலீசார், கதவை திறந்து மூதாட்டியை மீட்டனர். இதுகுறித்த புகாரின்படி, நகை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.