| ADDED : மே 09, 2024 12:16 AM
சென்னை:கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவருக்கு, திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர், இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட சென்று விடுவதால் வீட்டில் மகள்களுடன் தனியாக இருப்பார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெயில் புழுக்கம் காரணமாக, காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து துாங்கியுள்ளனர்.அப்போது, போதை ஆசாமி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து, கத்திமுனையில் மிரட்டியுள்ளார். இரண்டு குழந்தைகளும் அருகே படுத்திருந்ததால், போதை ஆசாமியால் மகள்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என, அச்சத்தில் உறைந்தார்.இந்த நேரத்தில் போதை ஆசாமி, அப்பெண்ணிடம் கத்தி முனையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அலறி அடித்து வெளியே வந்த அப்பெண்ணின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர்.தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பாதிக்கப்பட்ட பெண், கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பெண்ணிடம் அத்துமீறிய கோயம்பேடைச் சேர்ந்த ஜான் பால்ராஜ், 38, என்பவரை கைது செய்தனர்.