ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த, ஒரகடத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், விளிச்சனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன், 28. ஒரகடம் அடுத்த, வாரணவாசியில் நண்பர்களுடன் வாடகைக்கு தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், தான் வேலை செய்யும் நிறுவனத்தில் சார்பில், வேலுர் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றார். இதையடுத்து, இரவு 10:30 மணிக்கு மீண்டும் அறைக்கு வந்தார்.மது போதையில் இருந்த பரசுராமன், இரவு 11:30 மணிக்கு, அதே பகுதியில் உள்ள பெண்கள் அறைக்கு சென்று, ஜன்னலில் எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, பெண்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், பரசுராமனை பிடித்து தர்ம அடி அடித்தனர். இதில், தலை மற்றும் உடலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து, அங்கு வந்த பரசுராமணின் நண்பர்கள் அவரை மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஒரகடம் போலீசார், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட, வாரணவாசி பகுதியைச் சேர்ந்த 8 பேரை, போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.