| ADDED : ஆக 03, 2024 01:18 AM
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோவிலில், ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி மூலவர் அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீபாராதனை நடந்தது.உற்சவர் அங்காள அம்மன், புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் போல, நிறைமாத கர்ப்பிணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவசரந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள், தங்கத்தாரிணி அலங்காரத்தில் அருள்பாலித்தாகர். காஞ்சி ஸ்ரீஹரி நாட்டியாலயா பரதநாட்டிய பயிற்சி பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு சந்தவெளி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.காஞ்சிபுரம் ஆதி காமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆதிபீடா பரமேஸ்வரி, காளிகாம்பாள் அம்பாளுக்கு, மாலை ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று காலை கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 கலச பூஜை நடந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.