காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவில், பொன்னேரி அம்மனுக்கு 4வது வார ஆடி பெருவிழா, கடந்த 10ம் தேதி காலை நவசக்தி விநாயகர், பாதாள ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருவாசகம் முற்றோதலும், வெள்ளகுளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி, அம்மன் கரகம் வீதியுலா நடந்தது.இரண்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், மதியம் 1:30 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், கும்பம் படையலிடப்பட்டு அம்மன்வர்ணிப்பும் நடந்தது.ஆடி திருவிழா நிறைவு நாளான நேற்று, காலை 10:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 4:00 மணிக்கு வெள்ளகுளம் எதிரில் பொன்னேரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், அபிஷேக ஆராதனையும் நடந்தது.கூரம் சாமாத்தம்மன் மற்றும் மாரியம்மனுக்கு இரண்டாம் நாள் ஆடி திருவிழா நேற்று நடந்தது. இதில், காலைஅம்மன் பூங்கரகம் வீதியுலா நடந்தது.இரவு செல்வம் குருசாமி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சிநடந்தது.இன்று, காலை அம்மன் பூங்கரகமும், மதியம் கூழ்வார்த்தலும், மாலை பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்வும் நடக்கிறது. இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு தெரு கூத்துநடக்கிறது.காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் காயத்ரி பிரம்மணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து புலவர் சரவண சதாசிவம் குழுவினரின் சொல்லரங்கம் நடந்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு சந்தவெளி அம்மன் வேப்பிலைக்காரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் முல்லாபாளையம் தெருவில், தும்பவனம் மாரியம்மனுக்கு ஆடி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, காலை 10:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பிற்பகல் 1:00 மணிக்கு கொள்ளுகஞ்சி வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாட்டை செல்வ விநாயகர், துர்கை அம்மன் கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.