| ADDED : மே 11, 2024 12:30 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூரில் இருந்து மேட்டுக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்கம்பம் வாயிலாக மின்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.இதில், தைலந்தோப்பில் அமைந்துள்ள பகுதியில், சாலையோரம் உள்ள கம்பங்களில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இரண்டு கனரக வாகனம் எதிரெதிரே செல்லும்போதோ அல்லது வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரி லேசாக மின்கம்பியில் உரசினாலோ மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை இழுத்துகட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேல்கதிர்பூர் மற்றும் மேட்டுக்குப்பம் கிராம விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.l சின்ன காஞ்சிபுரம் சி.வி.ராஜகோபால் தெருவில் இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் வகையில், மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருவள்ளுவர் குருகுலம் எதிரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பாகத்தில், மின்விளக்கை இயக்குவதற்காக மின்பெட்டி திறந்த நிலையில் உள்ளது.அதில், மின் ஒயர்களும் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. அவ்வழியாக செல்லும் சிறுவர்கள், மின் ஒயரை பிடித்து இழுத்தால், மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, தெரு மின்விளக்கு கம்பத்தில், திறந்து கிடக்கும் மின்பெட்டியை பாதுகாப்பாக மூடி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.