உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சியின் 14 ஊராட்சிகள் சென்னையுடன்... இணைப்பு!  உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த திட்டம்

 காஞ்சியின் 14 ஊராட்சிகள் சென்னையுடன்... இணைப்பு!  உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளுக்கு உட்பட்ட 14 ஊராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த ஊராட்சிகள் உட்பட, சென்னையின் 200 வார்டுகள், 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளை உடைய 10 மண்டலமாக செயல்பட்டது. நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி.மீ., பரப்பில், 2011ல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.

200 வார்டுகள்

அதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் உடைய மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விரிவாக்க மாநகராட்சியில் உள்ள வருவாய்த் துறை எல்லைகள், சென்னை மாவட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள், சென்னை மாவட்டத்தில் சேர்ந்தன.தொடர்ந்து, புறநகரில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்த்து, தாம்பரம் மற்றும் ஆவடி தனி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.சென்னை மாநகராட்சி எல்லையில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டசபை தொகுதியை அடிப்படையாக வைத்து, மண்டலங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டன. சோழிங்கநல்லுார் தொகுதியில், இரண்டு மண்டலங்கள் உள்ளன.இதேபோல் மற்ற தொகுதிகளையும் கணக்கிட்டு, தற்போதுள்ள 15 மண்டலங்களை 23 மண்டலங்களாகப் பிரித்து, கடந்த ஆண்டு, ஏப்., மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், ஒரே தொகுதியில் இரு மண்டல தலைவர்கள், நிர்வாகக் குளறுபடி, நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால், மண்டலங்கள் பிரிப்பதற்கான இறுதி வரையறை நிலுவையில் உள்ளது.இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அபார வளர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், சோழிங்கநல்லுார்; திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதியில் உள்ள, 50 ஊராட்சிகளை, சென்னையுடன் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சிகள், அபார வளர்ச்சி அடைந்துள்ளன. வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.இதனால், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளை, சென்னையுடன் இணைத்து, 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. இதோடு, சட்டசபை தொகுதி அடிப்படையில் மண்டலங்களும் அதிகரிக்கும்.தற்போதுள்ள வார்டுகளின் பரப்பு, மக்கள் தொகை அடிப்படையில் வரையறையும் செய்ய வேண்டி உள்ளது.சென்னை மாநகராட்சி விரிவடையும்போது, வரி வருவாய் பெருகும். மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். நிதியுதவி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்தும், கூடுதல் நிதி பெற முடியும். இதனால், உள்கட்டமைப்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு, போதுமான வசதிகள் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

விரைவில் அறிவிப்பு

கடந்த 2019, டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு 2021, அக்., மாதம் இத்தேர்தல் நடந்தது.சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள, திருவள்ளூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2020 ஜன., மாதம் பதவியேற்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2021 அக்., மாதம் பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக் காலம், 5 ஆண்டுகள்.இத்தேர்தல், 27 மாவட்டங்களுக்கு மற்றும் ஒன்பது மாவட்டங்களுக்கு என, தனித்தனியாக நடந்ததால், இரண்டுக்கும் இடைப்பட்ட காலம், 21 மாதம் உள்ளது. இதனால், இந்த வித்தியாசத்தை மாற்றி, சீராக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. அடுத்த ஆண்டு, 27 மாவட்டத்தின் ஊரக உள்ளாட்சி பதவிக் காலம் முடிகிறது. அதற்குமுன், தமிழக அரசு முடிவு வெளியிடும். அப்போது, சென்னை மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகள் குறித்த அறிவிப்பும் வெளிவரும் என, அதிகாரி ஒருவர் கூறினர்.

ஆவடியும் விரிவாக்கம்

சென்னையை போல, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும், சுற்றியுள்ள ஊராட்சிகளையும் இணைத்து, தாம்பரம், ஆவடி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளிவரும் என, அதிகாரிகள் கூறினர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் இருந்து

சென்னையுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகள்ஆலந்துார் : ↓மூவரசம்பட்டு, அய்யப்பன்தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பரணிப்புதுார், மவுலிவாக்கம், தரப்பாக்கம், கோவூர், பெரியபனிச்சேரி, இரண்டாம்கட்டளை, தண்டலம்.ஸ்ரீபெரும்புதுார் : ↓மலையம்பாக்கம், கொல்லச்சேரி, கொழுமுனிவாக்கம்.திருப்போரூர் : ↓நாவலுார், தாழம்பூர், சிறுசேரி, புதுப்பாக்கம், கானத்துார், முட்டுக்காடு, கோவளம்.சோழிங்கநல்லுார் : ↓மேடவாக்கம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், ஒட்டியம்பாக்கம்.மதுரவாயல் : ↓வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம்.பூந்தமல்லி : ↓காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, பேம்பூர், அகரம்மேல், வரதராஜபுரம், பாரிவாக்கம்.மாதவரம் : ↓அன்னம்பேடு, வெள்ளானுார், மோரை, வடகரை, கிராண்ட்லைன், புள்ளிலைன், தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம்.பொன்னேரி : ↓விச்சூர், வெள்ளிவாயில்சாவடி.- நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி