UPDATED : பிப் 10, 2024 03:09 AM | ADDED : பிப் 09, 2024 11:16 PM
சென்னை:தாய்லாந்துக்கு கடத்த முயன்ற, 2.33 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக வைரக் கற்கள், சென்னை விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்துக்கு வைரக்கற்கள் கடத்தப் போகும் தகவல், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு, கடந்த 7ம் தேதி கிடைத்தது.அத்துறையின் தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தாய்லாந்து செல்லும் பயணியரையும், உடைமைகளையும் சோதனையிட்டனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு, சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும், 'தாய் ஏர்லைன்ஸ்' விமானத்தில் செல்லவிருந்த பயணியரை, தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்தனர்.சென்னையைச் சேர்ந்த, 30 வயது வாலிபர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து செல்ல, விமான நிலையத்திற்கு வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது கைப்பையை சோதனையிட்டனர். அதில், புத்தம் புதிய வைரக் கற்கள் மின்னிக் கொண்டு இருந்தன.இதையடுத்து, அவரது பயணத்தை ரத்து செய்தனர். அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக பரிசோதித்தனர்.அவருடைய கைப்பை மற்றும் அவர் அணிந்திருந்த உள்ளாடையில் இருந்த, 1,004 கேரட் வைரக் கற்களை பறிமுதல் செய்தனர்.அவற்றின் சர்வதேச மதிப்பு, 2.33 கோடி ரூபாய். அந்த நபரை கைது செய்து, தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.