காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத் துறை நடத்திய ஆய்வில், 220 ஏரிகளில் 25 சதவீதம்கூட தண்ணீர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, கிராமத்தினருக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக, மொத்தமுள்ள 381 ஏரிகளில், 200 ஏரிகள் முழுமையாக நிரம்பின. மற்ற ஏரிகள், 75 சதவீதமும், 50 சதவீதமும் நிரம்பி காணப்பட்டன.மற்ற ஏரிகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளன. 25 சதவீதம்கூட தண்ணீர் இல்லாமல் 220 ஏரிகள் உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கும் போது, ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தண்ணீர் நிரம்பிய ஏரிகளை நம்பியுள்ள, ஏரி பாசனம் செய்யும் விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர். இவர்கள், ஆண்டுதோறும் நவரை, சம்பா, சொர்ணவாரி என, மூன்று பட்டங்களில் நெல் பயிரிடுகின்றனர்.அதிகபட்சமாக, நவரை பருவமான டிசம்பர், ஜனவரியில் பயிரிட்டு இப்போது அறுவடை செய்கின்றனர். நவரை பருவத்தில் மட்டும் சராசரியாக, 50,000 - 65,000 ஏக்கர் வரை பயிரிடுகின்றனர். இதில், ஏரி பாசனத்தை நம்பி, குறிப்பிட்ட சதவீத விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் கவலை
அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், இரண்டாம் போகம் பயிரிட முடியாமல், கோடை வெயிலால் பாதிக்கப்படுகின்றனர். ஏரி தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது.காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள நத்தப்பேட்டை, செவிலிமேடு, குண்டுகுளம் என பல்வேறு ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. ஏற்கனவே பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகளிலும் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது. இப்போது ஏரியும் வறண்டு வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கோடையின் தாக்கம் கடுமையாக இருப்பதால், நிலத்தடி நீரும் வேகமாக குறைகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 1.15 மீட்டராக இருந்த நிலத்தடி நீர், பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 0.53 மீட்டர் குறைந்து 1.69 மீட்டராக பதிவானது.அதையடுத்து, மார்ச் மாதம் எடுத்த கணக்கெடுப்பின்போது, 0.52 மீட்டர் மேலும் குறைந்து, 2.21 மீட்டராக பதிவாகிஉள்ளது. இவ்வாறு மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தபடியே உள்ளதால், ஆடு, மாடு குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் போகுமோ என, நகரவாசிகள், கிராம மக்கள் கவலையில் உள்ளனர். தென்மேற்கு பருவமழை
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்திலேயே உத்திரமேரூர் ஏரியில் மட்டுமே 75 சதவீத தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகளில் நாங்கள் நடத்திய ஆய்வில், பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது.இதற்கு ஒரே தீர்வாக, ஜூன் மாதம் பெய்ய உள்ள தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்தால், ஏரிகளுக்கு ஓரளவு தண்ணீர் கிடைக்கும். கடந்த டிசம்பரில் பதிவான அளவுகளின்படி, 202 ஏரிகளில் 100 சதவீதம் தண்ணீர் இருந்தது. இப்போது, 326 ஏரிகளில் 50 சதவீதம் கீழாக தண்ணீர் இருப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கலெக்டர் ஏற்கனவே மீட்டிங் நடத்தி, கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறார். நாங்கள், மண்டல துணை பி.டி.ஓ.,க்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளோம்.ஊராட்சிகளில் தண்ணீர் குறைந்த போர்வெல்களை ஆழப்படுத்த சொல்லி இருக்கிறோம். கூடுதலாக நான்கு மோட்டார்களை வாங்க வேண்டும் என ஊராட்சி செயலர்களிடம் தெரிவித்து விட்டோம். குடிநீர் புகார்களை மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் உடனடியாக கவனிக்க ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
381 ஏரிகளில் தண்ணீர் இருப்பு விபரம்
தண்ணீர் இருப்பு சதவீதம் ஏரிகள் எண்ணிக்கை75 - 100 150- - 75 5425- - 50 1060 - -25 220
18,399 ஏக்கர் பாதிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு பெரிய ஏரிகள் உள்ளன. அதிக தண்ணீர் தேக்கி வைக்கவும், பாசன பரப்பும் இந்த ஏரி பகுதிகளில் அதிகம் உள்ளது. தாமல் ஏரி வாயிலாக 2,307 ஏக்கரும், தென்னேரி வாயிலாக 5,858 ஏக்கரும், உத்திரமேரூர் ஏரி வாயிலாக 5,636 ஏக்கரும், ஸ்ரீபெரும்புதுார் ஏரி வாயிலாக 1,423 ஏக்கரும், பிள்ளைப்பாக்கம் ஏரி வாயிலாக 1,096 ஏக்கரும், மணிமங்கலம் ஏரி வாயிலாக 2,079 ஏக்கரும் என, 18,399 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. உத்திரமேரூர் ஏரியில் மட்டுமே நீர் உள்ள நிலையில், மற்ற ஏரிகளில் நீர் மிகக் குறைவாக உள்ளது.
மேற்கொள்ளப்படும் பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 185 கோடி ரூபாய் மதிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன், புதிய குடிநீர் தொட்டிகள், கிணறு, குழாய் பதிப்பது, குடிநீர் இணைப்பு என கிராமந்தோறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், சில பணிகள் சரிவர நடக்காத சூழலில், பெரும்பாலான பணிகள் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கிறது.அதேபோல், மத்திய அரசின் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அம்ரூத் திட்டத்தின் கீழ், 35 கோடி ரூபாய் செலவில் வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சியில், புதிய குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.காஞ்சிபுரம் மாநகராட்சியில், உலக வங்கி நிதியுதவியுடன், 318 கோடி ரூபாய் செலவில், மாநகராட்சி முழுதும், குடிநீர் தொட்டிகள், புதிய பைப் லைன் போன்றவை அமைக்கும் பணிகள் சில நாட்கள் முன் துவங்கப்பட்டுள்ளன.