ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதால், சென்னை நகரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேசிய அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள 11 வகையான தடுப்பூசிகள், குழந்தைகளுக்கு போடப்படுகின்றன.அந்த வகையில், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.அதன்படி காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்புளூயன்ஸா, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை ரூபெல்லா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், 'விட்டமின் ஏ' குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில், இந்த தடுப்பூசிகள் போடப்படுகின்றன.இத்திட்டத்தில் சென்னை மாநகராட்சியில், ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.அதே எண்ணிக்கையிலான கர்ப்பிணியருக்கும், கர்ப்ப கால தடுப்பூசிகள் போடப்படுகின்றன.இந்நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில், 'மிக்ஜாம்' புயலுக்குப் பின், குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், மாநகராட்சிக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள், அங்கன்வாடி மையங்களில் நடக்கும் தடுப்பூசி முகாம்களில் மட்டுமே போட முடிகிறது.ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடும் அளவுக்கு, போதிய தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என, மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, இந்த தடுப்பூசி பற்றாக்குறைக்கு, அரசு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி செவிலியர்கள் கூறியதாவது:ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், தேவைக்கு ஏற்ப ஒன்றரை மாதங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.இதனால், சென்னை மட்டுமின்றி, பிற மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.'மிக்ஜாம்' புயலுக்குப் பின், தற்போது குறைவாகத் தான் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அவற்றை வைத்தே, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் மத்திய, மாநில அரசுகள் போதிய அளவு தடுப்பூசிகள் வழங்குவதில்லை.உற்பத்தி பாதிப்பு, நிதி பற்றாக்குறையால் தடுப்பூசி கொள்முதல் செய்வதில் சிக்கல் இருப்பதால், சென்னை நகரில் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் அனைத்து வகையான தடுப்பூசிகளுக்கும் பற்றாக்குறை இல்லை. அதேநேரம், 'மிக்ஜாம்' புயலுக்குப் பின், தடுப்பூசிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.இதனால், கையிருப்பில் சேமித்து வைக்க முடியாத அளவிற்கு தான், தினசரி தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. சில இடங்களில் தடுப்பூசி போடுவதில் சிரமம் இருந்திருக்கலாம். அவை, விரைவில் சரி செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அலைக்கழிக்கப்படும் மக்கள்!
சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்களை பொறுத்தவரை, குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டோருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள், அந்த எல்லைக்கு உட்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, ரத்தக் காயங்களுடன் ஒருவர் வந்தாலும், அவர் வீடு அமைந்துள்ள பகுதிக்கு உட்பட்ட மருத்துவமனைக்கே செல்ல வேண்டும் என, கறாராக கூறுகின்றனர். அதேபோல், குழந்தைகள், கர்ப்பிணியருக்கான தடுப்பூசி போட வந்தாலும், 'உங்கள் எல்லைக்கு உட்பட்ட மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நாங்கள் தடுப்பூசி செலுத்த மாட்டோம்; சிகிச்சை அளிக்க மாட்டோம்' என உறுதியாக கூறி, மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனைகள், மக்களை அலைக்கழித்து வருகின்றன.- நமது நிருபர் -