| ADDED : ஜன 30, 2024 03:45 AM
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் மகள் கீர்த்தனா, 25. இவர் நேற்று மதியம், தன் உறவினர் கஜேந்திரன் மகள் ரேஷ்மா, 26 என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லோடு ஆட்டோவில் இருந்து அ,தி.மு.க., கட்சியினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் ஒன்று பறந்து வந்து இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில், கீர்த்தனாவின் இடது கால் எலும்பு முறிவு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இரு சக்கர வாகனம் ஓட்டிய ரேஷ்மா காயமின்றி தப்பினார்.இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் கீர்த்தனாவை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகரித்து வரும் பேனர் கலாசாரம்
பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும், சென்னை மற்றும் புறநகர் பகுதி சாலையோரங்களில் நாளுக்கு நாள் அரசியல் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சி அதிகரித்து வருகிறது. இதை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.