| ADDED : பிப் 04, 2024 06:46 AM
செங்கல்பட்டு : காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி, 55. இவரது மனைவி தமிழ்ச்செல்வி, 48. இவர்களும், சீனுவாசன் - வசந்தா தம்பதியும் கூட்டாக சேர்ந்து, மாத சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம், காஞ்சிபுரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த துளசிராமன் மனைவி சரஸ்வதி என்பவர், சீட்டு பணம் கட்டி வந்தார். அதன்பின், 2020ம் ஆண்டு, தான் கட்டிய 14 லட்சம் ரூபாயை கேட்டபோது கொடுக்க மறுத்தனர்.இதுகுறித்து, சரஸ்வதி அளித்த புகாரையடுத்து, காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.அதன்பின், 2021ம் ஆண்டில் இருந்து தலைமறைவாக இருந்த சிவமூர்த்தி - தமிழ்ச்செல்வி தம்பதி, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில், நேற்று சரணடைந்தனர். இதையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், இவர்களை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.