மதுராந்தகம் : மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர்.ஐந்து மதகுகள் வழியாக, 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்களும் என, மொத்தம் 7,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.தற்போது, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியை துார் வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை புதுப்பித்து, கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன.மதுராந்தகம் பாசன நீர் வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:மதுராந்தகம் ஏரியை துார் வாரி ஆழப்படுத்துதல் மற்றும் கலங்கல்களை புதிதாக அமைக்கும் பணி, 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.இதில், 12 சதவீதம் நிதியான 15 கோடி ரூபாய் மதிப்பில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான 1,058 ஏக்கர் பரப்பளவில், 233 ஏக்கர் பரப்பளவில் மண் அள்ளும் பணி நடைபெற உள்ளது. இதில், 2 முதல் 3 அடி ஆழம் வரை மண் அள்ளும் பணியில், 22 சதவீதம் பணி நடந்துள்ளது. ஒன்று முதல் ஐந்து வரையிலான கலங்கல்களை புதுப்பிக்கும் பணி, 99 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. அவற்றில், 12 கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி அமைக்கும் பணி, 60 சதவீதம் முடிந்துள்ளது.ஏரியில், ஐந்து மதகுகள் உள்ளது. அவற்றில், நான்கு மதகுகளில் புனரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில், 2ம் எண் மதகு மட்டும், ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவதற்காக, முழுதும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. நீர் முழுதும் வெளியேற்றியவுடன், அங்கு கட்டுமான பணிகள் துவங்கப்படும்.ஏரியின் கரைப்பகுதியில், 1,500 மீட்டர் நீளத்திற்கு, கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, 95 சதவீதம் நடந்து முடிந்துள்ளது.ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதை தடுக்கவும், விளைநிலங்கள் பாதிக்கப்படாத வகையில், 18 கி.மீ., நீளத்திற்கு, 10 அடி உயரத்திற்கு கரையை உயர்த்தி அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.இதில், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து, ஏரியின் கலங்கல் வரை, 1,500 மீட்டர் நீளம் தார்ச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மே மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவுற்று, ஜூன், ஜூலை மாதங்களில், ஏரியில் தண்ணீர் சேமிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, ஏரியில், 76 சதவீதம் பணிகள் நடந்து முடிந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.