| ADDED : ஜன 08, 2024 11:58 PM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பினாயூர், குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, மிளகர்மேனி, களியப்பேட்டை, ராஜாம்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில், புழுதிகால் பயிர்களாக நெல், வேர்க்கடலை, உளுந்து, மிளகாய் உள்ளிட்டவை பல ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். இவை, முளைத்த பயிர்களாகவும், ஒரு சில இடங்களில் முளைக்கும் தருவாயிலும் உள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பின்பட்டத்திற்கு சாகுபடி செய்த அனைத்து பயிர்களும் பாதிக்கக்கூடும் என, இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, சாத்தணஞ்சேரி கிராம விவசாயிகள் கூறியதாவது:மழைக்காலம் என்பதால், மார்கழி மாத துவக்கத்தில் சம்பா பின்பட்ட சாகுபடி பணிகளை துவக்கினோம்.விதையிட்ட வேர்க்கடலை மற்றும் நடவு செய்த நெல் பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில், கன மழை பெய்து பயிரிட்ட நிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.இதனால், வளர்ந்த பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதோடு, சமீபத்தில் விதைத்த வேர்க்கடலை மற்றும் உளுந்து போன்றவை முளைப்புத்திறன் இல்லாமலே சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை, விவசாயத்தில் பெருத்தநஷ்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.