சுடுகாட்டை சீரமைக்க எதிர்பார்ப்பு
உத்திரமேரூர்:-கட்டியாம்பந்தல் சுடுகாட்டை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், கட்டியாம்பந்தல் கிராமத்தில், சித்தேரி அருகே சுடுகாடு உள்ளது. இந்த கிராமத்தினர் இறந்தால், இந்த சுடுகாட்டில் புதைத்தும், எரித்தும் வருகின்றனர். தற்போது, இந்த சுடுகாடு முறையாக பராமரிப்பு இல்லாமல், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால், இறந்தவர்களை சுடுகாட்டின் உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சுடுகாட்டில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, கட்டியாம்பந்தல் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.