| ADDED : பிப் 22, 2024 11:30 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும் எழுந்தருளிய காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.தொடர்ந்து காலை, மாலை என, மகரம், சந்திர பிரபை, தங்க சிம்ஹம், யானை, தங்க சூரிய பிரபை, தங்க ஹம்ஸம், தங்க பல்லக்கு, நாக வாகனம், முத்து சப்பரம், தங்க கிளி வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.நேற்று முன்தினம் காலை மரத்தேர் உற்சவமும், நேற்று காலை பத்ரபீடமும், இரவு குதிரை வாகன உற்சவமும் நடந்தது.பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் பிரபல உற்சவமான இன்று, இரவு 8:00 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.இதில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் காமாட்சிஅம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருவார்.