காஞ்சிபுரம் : 'தினமலர்' நாளிதழ் மற்றும் காஞ்சிபுரம் பச்சையப்பா'ஸ் சில்க்ஸ் இணைந்து வழங்கிய, 'அழகானப் பரிசு ஆடிச்சேலை' போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கும் விழா, நேற்று காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக நடந்தது.ஆடி மாதத்தையொட்டி, 'தினமலர்' நிறுவனம், காஞ்சிபுரம் பச்சையப்பா'ஸ் சில்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வாசகர்களுக்கு போட்டி வைத்து, வெற்றி பெறுவோருக்கு, சேலை பரிசளிக்க முடிவு செய்தது. அதன்படி, ஆடி மாதம் சனிக்கிழமை தோறும், 'தினமலர்' நாளிதழில், போட்டிக் கூப்பன் வெளியிடப்பட்டது. வாசகர்கள் ஆர்வமுடன் போட்டி கூப்பன்களை நிரப்பி அனுப்பினர். கேள்விக்கான பதில்களுடன், 'தினமலர்' நாளிதழ் குறித்து, சிறந்த கருத்துக்களை எழுதி அனுப்பிய வாசகர்கள், வாரத்திற்கு 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நான்கு வாரங்கள் நடந்த போட்டியில், 240 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, நேற்று காஞ்சிபுரம் கே.பி.கே.ரத்னாபாய் திருமண மண்டபத்தில் நடந்தது. 'தினமலர்' நிர்வாகி ஆர்.லட்சுமிபதி, பச்சையப்பா'ஸ் சில்க்ஸ் உரிமையாளர்கள் சுந்தர், பிரபு ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அழகான சேலைகளை பரிசளித்தனர்.விழா குறித்து, பச்சையப்பா'ஸ் சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர் பேசும் போது, 'இங்கு பரிசு வாங்கியவர்கள், பரிசின் மதிப்பு குறித்து கவலைப்படாமல், மகிழ்ச்சி பொங்க புடவைகளை வாங்கிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற 240 பேருக்கும், மேடையிலேயே பரிசு வழங்கியது, பாராட்டுக்குரியது. பரிசு கொடுக்க வந்தவர்களுக்கு, வாசகர்கள் பரிசு வழங்கியது, அவர்கள் 'தினமலர்' நாளிதழ் மீது கொண்டுள்ள பற்றை காண்பித்தது. தொடர்ந்து 'தினமலர்' நாளிதழ் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளோம்' என்றார்.கூடுவாஞ்சேரியை சேர்ந்த கிருஷ்ணன் பேசும் போது,''தினமலர்' நாளிதழ் நல்ல செய்திகளை, தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. 'தினமலர்' நிறுவனர் மிக சிரமத்திற்கிடையே, 1951ம் ஆண்டு 'தினமலர்' நாளிதழை துவக்கினார். தொடர்ந்து 61வது ஆண்டாக வெற்றிநடை போட்டு வருகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து, அதிக செய்திகள் வெளியிடப்படுகிறது. அதிகாரிகளும் உடனடியாக அப்பிரச்னைகளை தீர்க்கின்றனர். 'தினமலர்' நாளிதழின் சேவை தொடரட்டும்' என்றார்.திருவள்ளூரைச் சேர்ந்த கோபாலனார் பேசும் போது, ''தினமலர்' பந்தா, பகட்டு இல்லாமல் செய்திகளை வெளியிட்டு, கல்வியை போதித்து வருகிறது. மக்கள் அறிவு வளரவும், அநீதிகளை எதிர்த்தும், செய்திகள் வெளியிடப்படுகிறது. வாசகர்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறது. அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.திருவள்ளூரை சேர்ந்த பேராசிரியர் சுகுமாரன் பேசும்போது, ''தினமலர்' நாளிதழில் உரத்த சிந்தனை என்ற தலைப்பில், நாட்டின் அவலங்கள், பட்டவர்த்தனமாக, வெளியிடப்படுகிறது. அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'தினமலர்' தொடர்ந்து மணம் வீச வாழ்த்துகிறேன்' என்றார்.செய்யூரை சேர்ந்த சாரங்கபாணி கூறும்போது,'எனக்கு 61 வயதாகிறது. நான் வாங்கிய பரிசை, என் மனைவியின் தாய் வீட்டு சீதனமாகக் கருதி பெற்றுக் கொண்டேன். 'தினமலர்', 'உண்மையின் உரைகல்' என்று சொல்வதை விட, 'உண்மையின் எதிரொலி' என்று சொல்வது, மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்றார்.