சேதமடைந்த 'பேவர் பிளாக்' நடைபாதை
காஞ்சிபுரம் --- உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கத்தில் சாலையோரம் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கனரக வாகனங்கள் சென்றதால், நடைபாதையில் உள்ள பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் வீணாகும் நீர், நடைபாதை பள்ளத்தில் தேங்கியுள்ளது.கனரக வாகனங்களுக்கு வழி விட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சேதமடைந்த பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும்.- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம். மூடியே இருக்கும் பயணியர் உடைமைகள் அறை
காஞ்சிபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணியரின் வசதியை மேம்படுத்தும் வகையில், 2015ல், 'பிரசாத்' எனப்படும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ், யாத்திரை புத்துயிராக்கம் மற்றும் ஆன்மிகம் பெருக்குதல் இயக்கம் திட்டத்தில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், 5.48 லட்சம் ரூபாய் செலவில் பயணியரின் உடைமைகள் பாதுகாப்பு அறை கட்டப்பட்டது.காஞ்சிக்கு சுற்றுலா வரும் பயணியர் தங்களது உடைமைகளை இங்கு பாதுகாப்பாக வைத்துவிட்டு, கோவில்களுக்கு சென்று வரும் வகையில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் உடைமைகள் பாதுகாப்பு அறை, சுற்றுலா பயணியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் மூடியே கிடக்கிறது.எனவே, லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வீணாகி வரும் சுற்றுலா பயணியரின் உடைமைகள் பாதுகாப்பு அறையை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.முத்துகுமார், காஞ்சிபுரம். தார்ச்சாலை சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, விநாயகபுரத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்களின் குல தெய்வமாக உள்ளதால், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரதான தார் சாலையில் இருந்து பச்சையம்மன் கோவிலுக்கு செல்லும் மண் சாலை இணையும் இடத்தில், மண் அரிப்பு காரணமாக தார் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.- எஸ்.ஜானகிராமன்,காஞ்சிபுரம்.