உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உயர்மட்டப்பாலம் கட்டும் பணி மூன்று ஆண்டுகளுக்கு பின் நிறைவு

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உயர்மட்டப்பாலம் கட்டும் பணி மூன்று ஆண்டுகளுக்கு பின் நிறைவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - உத்திரமேரூர் நெடுஞ்சாலையில், மணல் மேடு பகுதியில், பாலம் கட்டும் பணி, மூன்று ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து, போக்குவரத்து துவங்கியது.உத்திரமேரூரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில், காஞ்சிபுரம் செல்லும் சாலையில், மணல்மேடு கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில், சாலையின் குறுக்கே நீரோடை செல்கிறது. நீரோடை மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஓடையில் தண்ணீர் குறைவாக செல்லும் போது, தரைப்பாலத்தின் கீழே தண்ணீர் செல்லும்.மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலத்திற்கு மேலே, நான்கைந்து அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும். தண்ணீர் குறையும் வரை, ஒரு வாரத்திற்கு மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைபடும். வாகனங்கள் மாற்று வழியில், சுற்றிச் செல்லும்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, தரைப்பாலம் அமைந்த பகுதியில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, உயர்மட்ட பாலம் கட்ட, அரசு 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. மூன்று ஆண்டுகளுக்கு முன், பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 45 லட்ம் ரூபாய்க்கு, மறு மதீப்பீடு தயார் செய்து, டெண்டர் விடப்பட்டது. திட்டமிட்டபடி 35 மீட்டர் நீளம், ஏழரை மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் கொண்ட, உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்திற்கு கீழே, வெள்ளநீர் சுலபமாக ஓடும் வகையில், 6 மீட்டர் அகலத்தில் நான்கு கண்களுடன், பாலம் கட்டப்பட்டுள்ளது. உயர்மட்ட பாலத்தின் இருபுறமும், இணைப்பு சாலை அமைக்கும் பணி, சில தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது. தற்போது, சாலையிலிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, வாகனப் போக்குவரத்து துவங்கி உள்ளது.உத்திரமேரூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சண்முகம் கூறும்போது, ' 'கடந்த பிப்ரவரியில் பணி துவங்கியது. பாலப்பணியை முடிக்க ஆறுமாத காலம் அவகாசம் உள்ளது. ஆனால், ஒரு மாதம் முன்னதாகவே பணிகள் முடிந்துவிட்டது. வாகனப் போக்குவரத்திற்காக கடந்த சனிக்கிழமை பாலம் திறந்து விடப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை