| ADDED : நவ 22, 2025 01:10 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, குண்டும் குழியுமாக உள்ள, எறையூர் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் எறையூர் ஊராட்சி உள்ளது. இங்கு, 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லக்கோட்டையில் இருந்து, எறையூர் செல்லும் பிரதான சாலை 3.8 கி.மீ., துாரம் உடையது. இப்பகுதி மக்கள், இந்த சாலை வழியாக, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்த இந்த சாலை, ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம், கடந்த 2018ல் தார் சாலை அமைக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளிலே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. தற்பேது, பல இடங்களில் சாலை சிதிலம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைநேரங்களில் சேதமடைந்த சாலை பள்ளங்களில், தண்ணீர் குளம் போல் தேங்கி வருகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, எறையூர் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.