உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டதால் மாணவ - மாணவியர் விளையாட இடையூறு

 பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டதால் மாணவ - மாணவியர் விளையாட இடையூறு

உத்திரமேரூர்: திருப்புலிவனத்தில், அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில், ஊராட்சி நிர்வாகத்தினர் அனுமதியின்றி, மரக்கன்றுகளை நட்டதால், மாணவ - மாணவியர் விளையாட முடியாமல் இடையூறாக உள்ளது. உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியரின் பயன்பாட்டிற்காக விளையாட்டு மைதானம் உள்ளது. விளையாட்டு மைதானத்தில் மாணவ - மாணவியர் விளையாட போதிய இடமும், சுற்றுச்சுவரும் உள்ளது. கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கோ-கோ ஆகிய விளையாட்டுகளை, மாணவ - மாணவியர் மைதானத்தில் விளையாடி வந்தனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத்தினர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்காமல், விடுமுறை நாளில் மைதானத்தில், மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதனால், மாணவ - - மாணவியர் தினமும் விளையாட முடியாமல் அவதிபடுகின்றனர். மேலும், வட்டார, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு, மாணவ - மாணவியரை தயார் செய்வதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. எனவே, திருப்புலிவனம் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி கூறுகையில், ''பள்ளி நிர்வாகத்திடம் கேட்காமல், விளையாட்டு மைதானத்தில் ஊராட்சி நிர்வாகத்தினர், மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதனால், மாணவ - மாணவியர் விளையாட இடையூறு ஏற்பட்டு வருகிறது. ''எனவே, விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை அகற்ற, ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என்றார். இது குறித்து ஊராட்சி செயலர் அமரேசன் கூறியதாவது: பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த மரக்கன்றுகளால் மாணவ - மாணவியர் விளையாட சிரமம் ஏற்படுவதாக, பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பள்ளி மைதானத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை