காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு என, 380 பேர் மனு அளித்தனர்.மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 45,000 ரூபாய் மதிப்பில், பயனாளி ஒருவருக்கு திருமண உதவியாக தங்க நாணயமும், நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு,, 53,000 ரூபாய் மதிப்பில், மொபைல் போன்களும் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.ஏரி நிலத்தை மீட்கக் கோரி மனு:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வளையக்கரணை ஊராட்சியில், வார்டு உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறோம். எங்கள் ஊராட்சிக்குட்பட்ட ஏரி புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனம், லாரிகள் நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளது. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அருட்பெருஞ்செல்வி தெருவைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர், சரசு தம்பதியினர். இவர்களுக்கு எட்டு மற்றும் ஆறு வயதில் இரு பெண் குழந்தைகள், காது, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். குழந்தைகளுக்கான உதவித்தொகை கேட்டு பலமுறை மனு அளித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை எனவும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் நேற்று மனு அளித்தனர்.