விவசாய நிலத்தில் மழைநீர் சம்பா நடவு பணிகள் பாதிப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் சித்தனக்காவூர் கிராமத்தில், பொதுப்பணித்துறை காட்டுப்பாட்டில் 180 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட மழையின்போது, செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், திருமுக்கூடல் தடுப்பணையில் இருந்து சித்தனக்காவூர் ஏரிக்கு, இருபோகம் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் வந்து சேகரமாகி உள்ளது.இந்த நீரை விளைநிலங்களுக்கு கொண்டு செல்லும் கால்வாய்கள், தற்போது தூர்ந்த நிலையிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் உள்ளன.மேலும், கடந்த வாரம் பெய்த மழையால் விளைநிலங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளநீர் வடிந்து செல்ல போதிய கால்வாய் வசதி இல்லாததால், சம்பா பருவ நடவு பணிகளை துவக்க முடியாமல் பெரும்பாலான விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஏரி கால்வாளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாருவது தொடர்பாக விவசாயிகள், கலெக்டர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், பொற்பந்தல் கிராமத்திலும் விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் நடவு பணிகளை துவக்க முடியாத நிலை உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:சித்தனக்காவூர் கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், தூர்ந்த நிலையிலும் இருப்பதால், சம்பா பருவ நடவு பணிகளை துவக்க முடியவில்லை.ஏரியில் போதிய நீர் இருந்தும், கால்வாய் வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், கடந்த மழையின்போது, விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளம் வடிந்து செல்லாததால், சம்பா நடவு பணிகளை துவக்க முடியாத நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.