உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரெடி நிம்மதி!:கடைகளில் இம்மாதமே பொருட்கள் வழங்க ஏற்பாடு

 புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரெடி நிம்மதி!:கடைகளில் இம்மாதமே பொருட்கள் வழங்க ஏற்பாடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்து காத்திருந்த, 7,000த்துக்கும் மேற்பட்டோரில், முதற்கட்டமாக 1,125 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இவர்கள், இம்மாதமே, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசு கடந்தாண்டு செப்., 15ம் தேதி, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியது. இத்திட்டம் துவங்கும் முன்பாகவும், திட்டம் துவங்கிய பிறகும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டுக்கு 7,000த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருந்தனர். அவர்களுக்கு புதிய கார்டு வழங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், கடந்தாண்டு விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்கும் உத்தரவை, பொது வினியோக துறை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்ட அதிகாரிகளால், விசாரணை முடிந்த விண்ணப்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுதும் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட ரேஷன் கார்டு மட்டும், முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது. அதற்கான குறுந்தகவல், பயனாளிகளின் மொபைல் எண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த நபர்களில், முதற்கட்டமாக ஐந்து தாலுகாக்களில், 1,125 பேருக்கு புதிய கார்டு வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் தாலுகாவில், 199 பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவங்கிய காலத்தில் விண்ணப்பித்து, இப்போது வரை காத்திருக்கும், 6,500 விண்ணப்பதாரர்களுக்கு, அடுத்தகட்டமாக புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு துவக்கத்தில் இருந்து, விண்ணப்பம் செய்து காத்திருந்த 7,625 பேரில், பல மாதங்களுக்கு பின், முதற்கட்டமாக 1,125 பேருக்கு, ரேஷன் கார்டு வழங்க துவங்கியிருப்பதால், விண்ணப்பதாரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.இதுகுறித்து, பொதுவினியோக திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதற்கட்டமாக 1,125 அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணிகள் துவங்கிவிட்டன. அவர்களுக்கு, மொபைல் போன் வாயிலாக, புதிய ரேஷன் கார்டு அங்கீகரிக்கப்பட்டதற்கான குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் காண்பித்து, மார்ச் மாதத்திற்கான அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும், இதுகுறித்து ஏற்கனவே அறிவுறுத்தி விட்டோம். பொருட்கள் தர மறுத்தால் புகார் அளிக்கலாம்.மேலும், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும், 6,500 பேரின் விபரங்கள் தொடர்பாக, நாங்கள் கள ஆய்வு செய்துள்ளோம்.மொத்த விண்ணப்பங்களில், 4,500 பேரின் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்து, அவர்கள் தகுதியானவர்களா என சரி பார்த்துள்ளோம்.புதிய ரேஷன் கார்டிற்கு அரசிடம் இருந்து அனுமதி பெற்றவுடன், உடனடியாக அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுவிடும். ஏற்கனவே கள ஆய்வு செய்யப்பட்டிருப்பதால், விரைந்து ரேஷன் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை