காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் முழுதும் உள்ள முக்கிய சாலைகள் எல்லாம் பராமரிப்பு இல்லாததால் சின்னாபின்னமாகி விட்டன. சீரமைப்பதாக மாநகராட்சி கண்ணாமூச்சி காட்டி வருவதால், மரண பீதியில் வாகன ஓட்டிகள் தினமும் வாகனங்களை இயக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில், 300 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் திட்ட பணிகளும், புறநகர் பகுதியில், 350 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணிகளும் நடக்கின்றன. மாநகராட்சி முழுதும் குடிநீர் திட்ட பணிகள் துவங்கும் முன்பே, சாலைகள் மிக மோசமாக இருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், நகரின் முக்கிய சாலைகளில் உள்ள பள்ளங்களைக்கூட சீரமைக்காமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்ததால், வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக, பேருந்து நிலையத்தில் உள்ள ஏராளமான பள்ளங்கள் இன்று வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. பெரிய பள்ளங்களாக இருப்பதால், மழைநீர் தேங்கி மோசமாக உள்ளது. நகரின் சாலைகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், நகர மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குற்றச்சாட்டு
ஆனாலும், நகரில் குடிநீர் திட்ட பணிகள் நடப்பதால், இயக்குநரகத்தில் இருந்து புதிய சாலை அமைக்க ஒப்புதல் கிடைக்கவில்லை என்கின்றனர். புதிய சாலை அமைக்க முடியவில்லை என்றால், சாலையை சீரமைக்க என்ன தயக்கம் என, பொதுமக்கள் மட்டுமின்றி, கவுன்சிலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும், மாநகராட்சி சீரமைப்பு என்ற பெயரில் கண்ணாம்பூச்சி காட்டி வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சில கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அக்கறை காட்டும் அதிகாரிகள், மற்ற வார்டுகளை கண்டு கொள்வதில்லை என, அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. 'பேட்ச் ஒர்க்' வேலையை செய்து கொடுக்க அதிகாரிகளிடம் பல கவுன்சிலர்கள் கெஞ்ச வேண்டிய நிலை நீடிக்கிறது. மழையில் சாலை படுமோசமாக உள்ளதோடு, பல வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்துள்ளனர். நான்கு மண்டலங்களுக்கும் தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு நடைபெறும் என, பொறியாளர் கணேசன், ஆறு மாதங்களுக்கு முன்பாக, மாநகராட்சி கூட்டத்திலேயே தெரிவித்திருந்தார். ஆனால், சாலையை சீரமைத்ததாக தெரியவில்லை. மாநகராட்சி முழுதும் 1,000க்கும் மேற்பட்ட பள்ளங்களால், நகருக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணியர், பக்தர்கள் என, பலரும் முகம் சுழிக்கின்றனர். சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தியும் அதிகரிக்கிறது. புகார்
சாலை பராமரிப்பு விஷயத்தில், மாநகராட்சி நிர்வாகம் கோட்டை விட்டதாகவே நகரவாசிகளும், கவுன்சிலர்களும் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசனிடம் கேட்டபோது,''சாலை சீரமைப்புக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்கி, சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்,'' என்றார். மே மாதமே டெண்டர் விடப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகள் இன்னும் நடக்கவில்லை. உயர்மட்ட அதிகாரிகள், உதவி பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் யாரும் சரியான முறையில் பணியாற்றுவதில்லை. சாலை பணிகளில் மாநகராட்சி சரியாக செயல்படவில்லை. என் வார்டில்கூட பணிகள் நடக்கவில்லை. - புனிதா சம்பத், அ.தி.மு.க., கவுன்சிலர், 23வது வார்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி.