| ADDED : பிப் 09, 2024 11:12 PM
ஒரகடம்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்த பனப்பாக்கம் அருகே, நேற்று மாலை, சென்னை மணலியில் இருந்து ஒரகடம் நோக்கி, இரும்புத் தகடுகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. லாரியை சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், 46, ஓட்டினார்.பனப்பாக்கம் அருகே வைப்பூர் செல்லும் சாலையில் திரும்பும் போது, ஒரகடத்தில் இருந்து படப்பை நோக்கி வேகமாக வந்த மற்றொரு லாரி மோதியது.இதில், இரும்புத் தகடுகளை ஏற்றி வந்த லாரியின் பின்புற சக்கரம் கழன்றது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் வராததால், 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த பொதுமக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து வந்த போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர். மாலை நேரம் என்பதால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.