உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் வேலியில் விதிமுறைகள் மீறி பிளக்ஸ் பேனர் வைப்பு
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், கல்வெட்டு கோவில் கம்பி வேலியில், விதிமுறைகள் மீறி 'பிளக்ஸ் பேனர்' வைப்பதை தடுக்கும்படி, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலில், குடவோலை தேர்தல் முறையை விளக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கோவிலை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணியர், தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள், உள்ளூர் பக்தர்கள் ஆகியோர் தினமும் வந்து செல்கின்றனர். கோவிலின் இரும்பு கம்பி தடுப்பு வேலியின் மீது, பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி இல்லை. ஆனால், சமீப நாட்களாக இந்த இரும்பு கம்பி தடுப்பு வேலியின்மீது கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், துணிக்கடைகள் ஆகியவை, பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகின்றன. இதனால், கல்வெட்டு கோவிலின் இரும்பு கம்பி தடுப்புவேலி, பிளக்ஸ் பேனர் வைக்கும் இடமாக மாறி வருகிறது. எனவே, பிளக்ஸ் பேனர்களை அகற்ற, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.