| ADDED : ஆக 20, 2024 02:47 AM
கரூர்: மகளிர் உரிமை தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை உண்மை என நம்பி கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஏராளமான பெண்கள் மனு வழங்க குவிந்தனர்.தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் அளிக்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் விடுபட்டுப்போனவர்கள் இணைவதற்கான சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடந்தது. இந்த திட்டத்துக்காக, 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதில், நேற்று, இன்று ஆகிய நாட்களில் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் என்ற தகவலை உண்மை என நம்பிய, ஏராளமான பெண்கள் குவிந்தனர்.கடந்த இரண்டு நாட்கள் முன் வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி முற்றிலும் வதந்தி என கலெக்டர் தங்கவேல் அறிவித்துள்ளார். இருந்தபோதும், வரிசையாக வந்து பெண்கள் மகளிர் உரிமை தொகை தொடர்பான மனுக்களை அளித்து விட்டு சென்றனர்.