கரூர்;கரூர் பஸ் ஸ்டாண்டில், தண்ணீர் தேங்கும் இடத்தில் புதிதாக, நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்ற, கரூர் பஸ் ஸ்டாண்ட், தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ளது. நாள்தோறும், 100 க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பஸ்கள் கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்கின்றன. இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் இருந்த, வணிக வளாக கட்டடம் சேதம் அடைந்து விட்டதாக கூறி, கடந்த, 2022ல் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில், புதிதாக கட்டடம் கட்டப்படாததால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வரும், பயணிகள் மழை மற்றும் வெயிலில் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் வணிக வளாக கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில், புதிதாக நிழற்கூடம் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், நிலத்தை உரிய முறையில் சமன் படுத்தாமல், மழை பெய்தால், தண்ணீர் தேங்கும் இடத்தில், நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது.கடந்த, 11 ல் அதிகாலை பெய்த மழையால், கரூர் பஸ் ஸ்டாண்டில் நிழற்கூடம் உள்ள இடத்தில், தண்ணீர் தேங்கியது.எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிதாக அமைக்கப்படும் நிழற்கூடங்களை, அமைக் கும் முன் நிலத்தை சமன்படுத்தி, தரமான முறையில் நிழற்கூடம் அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.