உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேட்பாளர் தங்கவேல் ஐந்து லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறணும்:மாஜி அமைச்சர்

வேட்பாளர் தங்கவேல் ஐந்து லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறணும்:மாஜி அமைச்சர்

கரூர்:'' கரூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை, ஐந்து லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.கரூர் அருகே, சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., செல்வ நகரில் நடந்த பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலு ஆதரித்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் பேசியதாவது:கடந்த, 2021ல் நடந்த சட்ட சபை தேர்தலில், மூன்று சதவீத ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., தோற்றது. அதற்கு காரணம், தி.மு.க., அளித்த பொய்யான வாக்குறுதிகள். குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் தருவேன் என, தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் தரவில்லை.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கொடுத்த அழுத்தம் காரணமாக, 27 மாதங்கள் கழித்து உரிமை தொகை தந்தனர். அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் தரவில்லை. அதேபோல், அரசு டவுன் பஸ்சில் இலவசம் என்றார்கள். ஆனால், பிங்க் கலர் பஸ்சில் மட்டும்தான் இலவசம் என, வெற்றி பெற்ற பிறகு சொன்னார்கள். தி.மு.க., என்றாலே பொய்தான்.அ.தி.மு.க., ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக தாலிக்கு தங்கம், ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசு பெட்டகம், உதவி தொகை, மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, முதல்வராக இருந்த போது, கோழி குஞ்சுகளை வழங்கினார்.இந்த திட்டங்களை எல்லாம், தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. அதற்கு பதிலடியாக தி.மு.க., அரசுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, வரும் லோக்சபா தேர்தலை பயன்படுத்தி கொண்டு, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை, ஐந்து லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சி வேட்பாளராக ஜோதிமணி மீண்டும் போட்டிடுகிறார். கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற ஜோதிமணி, தற்போதுதான் தொகுதி பக்கம் வேட்பாளராக வருகிறார். அவரை மீண்டும் வெற்றி பெற வைத்து, தவறு செய்து விடாதீர்கள். ஜோதிமணி வெற்றி பெற்றால், கரூர் பக்கம் வர மாட்டார். அவரை பார்க்க முடியாது. அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை, வெற்றி பெற வைத்தால், கரூர் லோக்சபா தொகுதியை விட்டு நகர மாட்டார். உங்களுடைய சுகம், துக்கங்களில் பங்கு பெறுவார். கரூர் தொகுதிக்கு வேண்டிய திட்டங்களை, மத்திய அரசிடம் கேட்டு பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாநகர் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் அரவை முத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை