| ADDED : ஜூன் 25, 2024 02:11 AM
கரூர்: கள்ளச்சாராயம் தொடர்பாக, மொபைல்போனில் தகவல் தெரிவிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: கரூர் மாவட்ட பகுதிகளிலிருந்து, மற்ற மாவட்டங்களை இணைக்கும் வழித்தடங்கள் அனைத்தும் வருவாய்த்துறை, போலீசார், வனத்துறை மூலம் தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் தடுப்பு தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் புதியதாக சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள், 9498410581, 9445074583 என்ற மொபைல் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மருத்துவ தேவை ஆய்வுக் கூடங்களுக்கு மெத்தில் ஆல்கஹால் மற்றும் எத்தனால் உரிமம் வைத்துள்ளவர்கள் அனைவரும், தங்கள் வரம்பிற்குட்பட்டு மட்டுமே பயன்படுத்துவதை முழுமையாக கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் எஸ்.பி., பிரபாகர், டி.ஆர்.ஓ., கண்ணன், உதவி ஆணையர் கலால் கருணாகரன், ஆர்.டி.ஓ., முகமது பைசல் (கரூர்), தனலட்சுமி (குளித்தலை), மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) அன்னம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.