கரூர்:அரசு பள்ளியில் சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால், ஒரு மாதத்திற்கு மேலாக மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், 751 அரசு மற்றும் அரசு நிதி உதவி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யூ.கே.ஜி., எல்.கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து, 812 மாணவ, மாணவியர் கல்வி கற்று வருகின்றனர். ஆண்டுதோறும், பாட புத்தகங்கள், நோட்டுகள், பை, காலணி, சீருடை, கல்வி சார்ந்த உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. இதுவரை, சீருடை வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு பயன்படுத்திய சீருடைகளையே அணிந்து வருகின்றனர். அதேநேரம், பலருக்கு அவர்களின் வளர்ச்சி காரணமாக அல்லது துணி கிழிந்து விட்டதால் சீருடைகளை பயன்படுத்த முடிவதில்லை என பெற்றோர் கூறுகின்றனர்.இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது:அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரைக்கால் டிரவுசர், சர்ட், 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ட், பேன்ட் வழங்கப்படுகிறது. மாணவியருக்கு, 1 முதல் 4-ம் வகுப்பு வரை ஸ்கர்ட், சர்ட், 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாவாடை-, சர்ட், 6 முதல் 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு கோட்டுடன் சுடிதார் வழங்கப்படுகிறது. பள்ளி திறக்கும் நாளில் இரண்டு ஜோடி சீருடை, அரையாண்டு தேர்வின் போது, இரண்டு ஜோடி சீருடை என மொத்தம் நான்கு ஜோடி சீருடை வழங்கப்படும்.பள்ளி திறந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் புதிய சீருடை வழங்கப்படவில்லை. சிலர் பழைய கிழிந்த சீருடையையே அணிந்து வருகின்றனர். 1 ம் வகுப்பு மற்றும் சீருடை இல்லாத மாணவ, மாணவியர் கலர் டிரஸ்சில் வருவதை வேறு வழியின்றி அனுமதிக்க வேண்டி உள்ளது. சீருடை வழங்கப்பட்டால், அனைவரும் ஒரே மாதிரி அணிந்து வருவர்.இவ்வாறு கூறினர்.