கரூர்: கரூர் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக வசதிக்காக தனி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 12 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.திருச்சி மாவட்டத்தில் இருந்து, கரூர் மாவட்டம் கடந்த, 1995ல் தனியாக பிரிக்கப்பட்டது. பின் கடந்த, 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், வெற்றி பெற்ற மாவட்ட பஞ்., தலைவருக்கு, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் அறை ஒதுக்கப்பட்டது. மேலும், மாவட்ட பஞ்., கூட்டமும், அந்த கட்டடத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்து வருகிறது. அதே கூட்டரங்கில், மற்ற அரசு துறைகள் சார்பில் கலந்தாய்வு கூட்டமும் நடந்து வருகிறது. கடந்த, 23 ஆண்டுகளாக ஒரே கட்டடத்தில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட பஞ்., கூட்டமும், பல்வேறு துறை சார்ந்த கூட்டமும் நடந்து வந்தது. குறிப்பாக, வேறு அரசு துறைகளின் கூட்டம் நடக்காத போது, மாவட்ட பஞ்., கூட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில் கடந்த, 2011ல் அக்., மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, மாவட்ட பஞ்., பிடித்தது. மொத்தமுள்ள, 12 மாவட்ட கவுன்சிலர்களும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர். இதையடுத்து, கரூர் மாவட்ட பஞ்., நிர்வாக வசதிக்காக, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான தீர்மானம் கடந்த, 2012ல் மாவட்ட பஞ்., கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.கரூர் மாவட்ட பஞ்., பொறுப்பில் (2011---16) இருந்த, 12 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்பதால், புதிய கட்டட பணிகள் எளிதாக துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்டப்படவில்லை. கடந்த, 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசன் தலைவராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதால், மாவட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர், தி.மு.க.,வுக்கு தாவினர். இதனால், மாவட்ட பஞ்.,க்கு என, புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த, 12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜன., மாதம் நிறைவு பெறுகிறது.இதனால், வரும் டிச., மாதம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடந்த, 2012ம் ஆண்டு நடந்த மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கரூர் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக வசதிக்காக, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்பார்க்கின்றனர்.