கரூர்:தேசிய நெடுஞ்சாலைகளில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அப்போது, வாகனங்களில் இருந்து, கார்பன்
டை ஆக்சைடு நச்சு பொருட்கள் வெளியேறும். இந்த நச்சு வாயு, காற்றை
பாதிப்பதுடன் சாலையில் பயணம் செய்வோருக்கு சுவாச கோளாறுகளை
ஏற்படுத்தும். அரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள் கார்பன்
துகள்களை காற்றில் இருந்து நீக்கி, காற்றில் உள்ள மாசுக்களை அகற்றி, துாய
காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை. மேலும், எதிரே வரும் வாகனங்களின்
முகப்பு விளக்கின் ஒளியையும், அரளி பூ செடிகள் கட்டுப்படுத்தும்.
இதனால், விபத்துகளும் தவிர்க்கப்படுகிறது.இதனால், நாடு முழுதும்
உள்ள தேசிய நெடுஞ்சாலை நடுவே, அரளி பூ செடிகள் வளர்க்கப்படுகின்றன.
கரூர் மாவட்டத்தில், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, சேலம் தேசிய
நெடுஞ்சாலைகளின் குறுக்கே, அரளி பூ செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.
தற்போது, கோடைக்காலம் தொடங்கிய நிலையில், கரூர் மாவட்டத்தில்
நாள்தோறும் சராசரியாக, 100 டிகிரி பாரன்ஹீட் வெயில்
சுட்டெரிக்கிறது. இதனால், நெடுஞ்சாலைகளில் உள்ள அரளி பூ செடிகள்,
போதிய தண்ணீர் இல்லாமல் கருகிய நிலையில் உள்ளது.எனவே,
வாகனங்களில் இருந்து வரும், கார்பன் டை ஆக்சைடு வாயுவை
கட்டுப்படுத்தவும், விபத்துகளை தவிர்க்கவும், அரளி பூ செடிகளுக்கு
நாள்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என, வாகன ஓட்டிகள்
எதிர்பார்க்கின்றனர்.