கரூர், கரூர் த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில், அதிகாரிகள் கரூர் பயணியர் மாளிகையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை, தமிழக நெடுஞ்சாலை துறையை சேர்ந்த நான்கு அதிகாரிகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அப்போது, த.வெ.க., கூட்டம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில், ஏற்கனவே அரசியல் கட்சி கூட்டங்கள் நடந்துள்ளதா, கூட்டத்துக்கு நெடுஞ்சாலை துறை சார்பில், அனுமதி வழங்கப்பட்டதா, த.வெ.க., கூட்டத்தின் போது, வேலுச்சாமிபுரத்தில் சாலையின் நடு பகுதியில் இருந்த, தடுப்பு சுவர்களை ஏன் அகற்றவில்லை, அரசியல் கட்சி கூட்டம் நடத்த வேலுச்சாமிபுரம் சாலை பகுதி சரியான இடமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுள்ளனர்.அதேபோல், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த, இரண்டு அதிகாரிகள் நேற்று இரண்டாவது முறையாக சி.பி.ஐ., விசாரணைக்காக பயணியர் மாளிகைக்கு நேற்று வந்தனர். அப்போது, த.வெ.க., கூட்டம் நடந்த போது, ஏற்பட்ட மின் தடை குறித்த, ஆவணங்களை வழங்கினர்.மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று விசாரணைக்கு வந்ததால், கரூர் பயணியர் மாளிகை பரபரப்பாக காணப்பட்டது.