அன்னதானத்துக்கு காத்திருந்து ஏமாற்றம் அடையும் பக்தர்கள்
தாரமங்கலம், சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அன்னதான திட்டத்தில், தினமும், 30 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த கோவில், 1,200 ஆண்டு பழமையானது. அரிய வகை சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது. இதனால் வெளிநாடு, வெளி மாநிலம், பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தவிர பள்ளி, கல்லுாரிகளில் இருந்து, கோவில் சிறப்பை அறிய மாணவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். ஆனால் அன்னதான திட்டத்தில் 30 பேருக்கு மட்டும் அனுமதியால், உணவருந்த காத்திக்கும் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைவது, அடிக்கடி நடக்கிறது. சில நாட்களில் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதனால் குறைந்தபட்சம், 50 பேருக்காவது உணவு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.