கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், வெற்றிலை விலை உயர்ந்து விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, திருக்காம்புலியூர் பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசன தண்ணீர் கொண்டு நீர் பாய்ச்சப்படுகிறது. வெற்றிலைகள் பறிக்கப்பட்டு, 100 கவுளி கொண்ட மூட்டையாக கட்டப்பட்டு லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செயல்படும் கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம், 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை, 2,800 ரூபாய்க்கு விற்றது. 100 வெற்றிலை கொண்ட கவுளி, 28 ரூபாய்க்கு சில்லரை யில் விற்கப்பட்டது. தற்போது விலை உயர்ந்து கவுளி ஒன்று 30 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலும், 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை, 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெற்றிலைகள் மொத்தமாக விவசாயிகளிடம் வாங்கி, சில்லரை விற்பனையாக கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மேட்டுப்பாளையம், வேலுார் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. சுபமுகூர்த்த சீசன் துவக்கம் காரணமாக, வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.