| ADDED : ஜன 10, 2024 12:35 PM
அரவக்குறிச்சி: அமராவதி அணையில் இருந்து நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 7,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை அமைந்துள்ளது. அமராவதி அணையின் கடைமடை பகுதி கரூர் மாவட்டமாகும். அமராவதி அணையின் நீர் கொள்ளளவு திறன், 90 அடி. தற்போது அணையில், 89.14 அடி நீர் இருப்பு உள்ளது. அதே சமயம் அணைக்கு நீர்வரத்து, 4,548 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, 7,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த நீரானது கரூர் பகுதிக்கு, எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம். எனவே அரவக்குறிச்சி சுற்றியுள்ள அமராவதி அணையின் ஆற்றங்கரையோர கிராமங்களான ராஜபுரம், கொத்தப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடத்தில் குடியேற மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.