கரூர்: நடப்பாண்டு - 2024 லோக்சபா தேர்தலை எதிர்பார்த்து, பொதுவாக பல இலவச திட்ட அறிவிப்பு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பழைய திட்டங்களை தொடர நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துடன் இணைந்த ஜவுளி துறைக்கு, சிறிய ஜவுளி பூங்கா அறிவிப்பு வரவேற்றக்கத்தக்கது என, கரூரில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாவிஷ்ணு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க, முன்னாள் மாநில துணைத் தலைவர்: தமிழக அரசின், 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்வையும் வெளியிடாதது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தை என்ற பெயரில், போராட்டங்களையும் நடத்த விடாமல் தடுத்து நாடகமாட, இந்த அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் பாடம் புகட்டுவார்கள். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் நல்வாழ்வை புறந்தள்ளிய நிதிநிலைஅறிக்கை வெறும் வெற்று அறிக்கையே ஆகும்.கோபாலகிருஷ்ணன், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாட்டுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிப்காட் தொழிற்பேட்டையில் பொதுத்துறை, தனியார் பங்களிப்பு குழந்தைகள் காப்பகம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு. ஜவுளி பொருட்களின் தரத்தை உயர்த்திட, 20 கோடி ரூபாய் செலவில் கரூர், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் சிறிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.பத்மநாபன், தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர்: தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 34 மாதங்கள் கடந்த நிலையிலும், நிலுவை உள்ள அகவிலை படி வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, அகவிலைபடி அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், பட்ஜெட் டில் எந்த அறிவிப்பும் இல்லை. அரசு ஊழியர்கள், மின்வாரிய பணியாளர்கள் ஓய்வூதியம், ஓய்வூதியம் பண பலன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று காத்திருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. சென்ற பட்ஜெட்டில், 500 மின்சார பஸ்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை ஒரு பஸ் கூட கொள்முதல் செய்யவில்லை. இந்த பட்ஜெட்டில், 500 மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று 'ரிபிட்' அறிவிப்பாக உள்ளது.ராஜாராம், காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர்: தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக உள்ளது. திட்ட ஒதுக்கீட்டில் மதுரை, கோவை, சேலத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது போல் தெரிகிறது. 2024 தேர்தலை எதிர்பார்த்து பொதுவாக பல இலவச திட்ட அறிவிப்பு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பழைய திட்டங்களை தொடர நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்து. விவசாயத்துடன் இணைந்த ஜவுளி துறைக்கு, சிறிய ஜவுளி பூங்கா அறிவிப்பு வரவேற்றக்கத்தக்கது. திருச்சியை இணை தலைநகரமாக மாற்றப்படும் என்று அறிவிப்பு இல்லை. ஆனால், முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு தொடர்கிறது.