| ADDED : மார் 25, 2024 07:03 AM
அரவக்குறிச்சி : கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் தினசரி மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இதில் சந்தை பராமரிப்பு பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. மேலும், சாலை பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பராமரிப்பு பணியின் போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.கடந்த இரண்டு மாதமாக பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்து, நேற்று காலை வியாபாரிகள், அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பணிகளை விரைந்து முடிக்க கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.