| ADDED : ஆக 04, 2024 01:19 AM
கிருஷ்ணகிரி, ஆடிப்பெருக்கையொட்டி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலுள்ள செல்லியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோவில் மற்றும் அணையிலுள்ள மார்கண்டேய சுவாமி கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜை, அணையில் சுவாமி வீதி உலாவும் நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலுள்ள செல்லியம்மன் சுவாமி சிலை முன் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது.தென்பெண்ணை ஆற்றில் குளிக்க ஏதுவாக, கிருஷ்ணகிரி அணையிலிருந்து நேற்று முன்தினம் மாலை முதல், 505 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆடிபெருக்கையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர்.* நேற்று ஆடிபெருக்கு நாளில் பேரூஹள்ளி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் குளம் போல் தேங்கியுள்ள நீரில் பக்தர்கள் புனித நீராடினர். அதேபோல் அனுமன் தீர்த்தம், நீப்பத்துறை உள்ளிட்ட பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்ததால், பக்தர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கியும், சின்டெக்ஸ் டேங்க்கில் உள்ள தண்ணீரில் குளித்தும் தங்களது காணிக்கையை செலுத்தினர். * அனுமன்தீர்த்தம் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அருகில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதிலிருந்து பக்தர்கள் ஒருவருக்கு தலா, 5 ரூபாய் கொடுத்து குளித்தனர்.