கிருஷ்ணகிரி, -தமிழகத்தின் வனப்பரப்பை, 23.7 சதவீதத்தில் இருந்து, 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கோடு, தமிழ்நாடு பசுமை இயக்கம் செயல்பட்டு வருகிறது. அடுத்த, 10 ஆண்டுகளில், நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், தொழிற்சாலைகள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள், ஆற்று படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில், உள்ளூர் மர வகைகளை நட வேண்டும். இதற்கான மரக்கன்றுகள் பர்கூர் சமூக காடுகள் மற்றும் விரிவாக்க சரகத்திற்கு உட்பட்ட, கிருஷ்ணகிரி அருகிலுள்ள பையனப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில், வளர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.இது குறித்து, மத்திய நாற்றங்கால் வனச்சரக அலுவலர் குமரவேல் கூறியதாவது: பையனப்பள்ளி மத்திய நாற்றங்கால் பண்ணையில், மகாகனி, செம்மரம், சவுக்கு, வேங்கை, ஜம்புநாவல், சில்வர் ஓக், சந்தனம், தேக்கு போன்ற மரக்கன்றுகள் வளர்த்து, நடவு செய்ய தயார் நிலையில் உள்ளன. இதை அரசு மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உரிய ஆவணங்களை வழங்கி, தங்களது மண் தன்மைக்கு ஏற்ப தேவையான மரக்கன்றுகள் விபரங்கள் தெரிவித்தால், வனத்துறை மூலம் இலவசமாக நடவு செய்து தரப்படும். மரக்கன்றுகள் வேண்டுவோர், வனச்சரக அலுவலர் குமரவேல், 94428 18363, வனவர்கள் பிரபுதயாள், 94865 99044, சண்முகசுந்தரம், 98947 98960 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.