| ADDED : ஜூலை 22, 2024 12:26 PM
ஓசூர்: ஓசூரில், டெங்கு கொசு புழுக்களை ஒழிக்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தற்போதைய பருவநிலை டெங்கு கொசுப்புழுக்கள் வளர ஏற்றதாக உள்ளதால், அவற்றை அழிக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, தேவையில்லாத டயர்களில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் தண்ணீரால், கொசு புழுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது. அதனால், மாநகராட்சி மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையிலான ஊழியர்கள், கடைகள், வீடுகள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் தண்ணீர் தேங்கி கிடக்கும் டயர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி கடைகள் மற்றும் வீடுகளில் தேவையில்லாமல் தண்ணீர் தேங்கி நின்ற, 100க்கும் மேற்பட்ட டயர்களை பறிமுதல் செய்த ஊழியர்கள், அதன் உரிமையாளர்களுக்கு, 12,500 ரூபாய் அபராதம் விதித்தனர். வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை, அதன் உரிமையாளர்கள் எடுக்க வேண்டும். இல்லா விட்டால் மாநகராட்சி மூலம் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.