| ADDED : ஜூன் 30, 2024 03:58 AM
ஓசூர்: கெலமங்கலம் அருகே பைரமங்கலத்தை சேர்ந்தவர் நாராயணா, 35. ஓட்டல் சப்ளையர்; முகளூரை சேர்ந்தவர் கனகா, 30; இருவருக்கும் கடந்த, 5 ஆண்டுக்கு முன் திருமணமானது. கனகா இருமுறை கர்ப்பமான நிலையில் கரு கலைந்து விட்டது. 3வது முறையாக கர்ப்பமடைந்த கனகாவிற்கு, கடந்த இரண்டரை மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. சுபிக்ஷா என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். கடந்த, 20 நாட்களுக்கு முன், கனகாவிற்கு உடல்நிலை பாதிப்பால், முகளூரிலுள்ள தன் தாய் வெங்கடம்மா வீட்டில் குழந்தையுடன் தங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, கணவர் நாராயணாவிற்கு போன் செய்த கனகா, குழந்தை சுபிக்ஷா இறந்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக நாராயணா மற்றும் அவரது குடும்பத்தினர் முகளூர் கிராமம் சென்று, குழந்தை எவ்வாறு இறந்தது என கனகாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நாராயணாவிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, தன் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக, கெலமங்கலம் போலீசில் தந்தை நாராயணா நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.